
அக்னி நட்சத்திரம் 2024. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டின் சித்திரை மாதம் வெயில் கொழுத்த ஆரம்பிக்கும். பிறகு 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும். இதனை கத்திரி வெயில் என்றும் குறிப்பிடுவார்கள். ஏன் அந்த நாட்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. தமிழர்கள் புராணத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கு. வாங்க பாக்கலாம்.
அக்னி நட்சத்திரம் 2024
புராணம்:
முன்னொரு காலத்தில், சுவேதகி என்ற மன்னர் ஒரு யாகம் வளர்த்தார், அந்த யாகமானது 12 ஆண்டுகள் நீடித்தது, அந்த யாகத் தீயில் அவர் இட்ட நெய்யின் காரணமாக அக்னி தேவனுக்கு தீராத பசி உண்டாகியது. அக்னி பகவானின் பசியை போக்க தேவர்கள் பல விதத்தில் முயற்சித்தபோதும், அக்னி தேவனின் பசி அடங்கவில்லை.
இதனால், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பிரம்மனிடம் சென்று இதற்கு ஒரு வழியை கேட்டனர். அதற்கு, பிரம்மன் கோரமான பசியும் வயிற்று வழியும் தீர வேண்டுமானால், ஒரு அடர்ந்த காட்டை விழுங்கி ஆகவேண்டும் என்றார். உடனே, காட்டை தேடி ஓடினார் அக்னி பகவான். எல்லா இடங்களிலும் தேடியவர், யமுனை நதிக்கரை ஓரமாக இருந்த, மலர் பூத்து குலுங்கிய காண்ட வனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்து, அந்த காட்டை நெருங்கினார்.
கானகத்தை விழுங்க நெருங்கிய அக்னிக்கு ஒரு சோதனை வந்தது, இக்காட்சியை கவனித்து கொண்டிருந்த இந்திரன் வருண தேவன் மூலமாக கானகத்தை சுற்றி அடர் மழையை பெய்யும் படி செய்தார். இதனால், அக்னி தேவனால் அந்த காட்டை விழுங்க முடியவில்லை. கானகத்தை விழுங்க பல வடிவம் எடுத்த அக்னி பகவான், கடைசியாக பசியின் கொடுமையால் ஒரு முதியவர் வேடத்தில் தள்ளாடியபடியே, யமுனை கரை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக கிருஷ்ணா பகவானும், அர்ஜுனனும் வந்தார்கள். அங்கு முதியவர் வடிவில் இருந்த அக்னி பகவானிடம், பகவான் கிருஷ்ணர் தாங்கள் யார் என்று வினவினார். அக்னி தேவன் தான் யார் என்பதை பற்றியும், தான் மிகவும் பசியில் உள்ளதால், காண்டவனத்தை காட்டி அந்த வனம் தான், அவர் சாப்பிட்டு பசியாற வேண்டிய பொருள் என்றும் இந்திரன் தனக்கு ஏற்படுத்திய தடை குறித்தும் புகார் கூறி, கிருஷ்னரிடம் அதற்கு தீர்வு கேட்டார்.
அழகர் எதிர்சேவை 2024 பற்றி உங்களுக்கு தெரியுமா, எமனுக்கு ஏற்பட்ட சாபத்தையே நீக்கும் சக்தி கொண்ட மலை !
கிருஷ்ண பகவான் அக்னி தேவனிடம் நான் உனக்கு உன் பசியை தீர்க்கும் உணவை தருகிறேன் என்று கூறினார். அப்போது அக்னி தேவன் தன்னுடைய சுய ரூபத்துக்கு மாறினார். கிருஷ்ண பகவான் அக்னி தேவனிடம் காண்டவனத்தை விழுங்க உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார், அத்துடன் ஒரு நிபந்தனையும் இட்டார்.
அதற்கு கால வரம்பாக 21 நாட்களையும் வரையறுத்தார். பின்னர், அர்ஜுனனிடம் அக்னி தேவனுக்கு பாதுகாப்பு தரும்படி உத்தரவிட்டார். தன் வில்லின் மூலமாக அர்ஜுனன் ஆயிரக்கணக்கான அம்புகளால் அந்த வனத்திற்கு மேலே ஒரு கூடாரத்தை உருவாக்கினார். கிருஷ்ணின் பாதுகாப்பில் தனது ஏழு நாக்குகளையும் நீட்டியபடி வனத்திற்குள் புகுந்து விழுங்க தொடங்கினார்.
இதனை கண்டா இந்திரன் மீண்டும் வருண தேவன் மூலமாக பெரும் மழையை பெய்வித்தார். ஆனால் ஒரு மழை கூட அக்னியின் மேல் படாமல், அர்ஜுனனின் அம்பு கூரை காத்து நின்றது. அக்னி பகவான் முதல் 7 நாட்கள் பூமியின் கீழ் பகுதியை உண்டார், அந்த சமயம் வெப்பம் மெதுவாக பரவத்தொடங்கியது. அடுத்த 7 நாட்கள் படர்ந்திருந்த அடர் காட்டை உண்டார், அந்த நேரத்தில் வெப்பம் கடுமையாக பரவி சுடத்தொடங்கியது.
இறுதியாக 7 நாட்கள் பாறைகளை விழுங்கியதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து முழுமையாக தாழ்ந்து இளம் வெயில் மட்டுமே வரத்தொடங்கியது. இப்படியாக, அக்னி பகவான் காண்டவனத்தை விழுங்கிய 21 நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று சொல்லப்படுகின்றது.
அக்னி நட்சத்திரம் 2024:
நடக்கும் 2024ஆம் ஆண்டில் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி, மே 28 அன்று நிவர்த்தி அடைகிறது.
நட்சித்திர வெயில்:
இந்த அக்னி நட்சத்திர காலத்தில், முதல் 7 நாட்கள் மெதுவாக அதன் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிகஅளவில் வெயில் இருக்கும். கடைசி 7 நாட்களில் படி படியாக வெப்பமானது குறையும்.
அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்வதால், வெப்பம் கடுமையாக இருக்கிறது. இதனால் தான், அக்னி நட்சித்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.